கடலூர் சில்வர் கடற்கரை, நாகப்பட்டினம் காமேஸ்வரம் கடற்கரை, இராமநாதபுரம் அரியமான் கடற்கரை ஆகியவை 2026–27 பருவத்துக்கான சர்வதேச நீலக்கொடி (Blue Flag) சான்றிதழைப் பெற்றுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் கோவளம் கடற்கரை தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நீலக்கொடி அந்தஸ்தைத் தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. டென்மார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (FEE), தூய்மை, பாதுகாப்பு, நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை உள்ளிட்ட 33 அளவுகோல்களின் அடிப்படையில் இச்சான்றிதழை வழங்குகிறது. தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் (TN-Shore) கீழ் இம்முயற்சி செயல்படுத்தப்படுகிறது; சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இதனை ஒருங்கிணைக்கிறது.