தமிழ்நாட்டில் கருப்பைவாய்ப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள ஐந்து மாவட்டங்களில் முதல் கட்டமாக HPV-DNA பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1,24,215 பெண்களை இலக்காகக் கொண்டு முதல் கட்டம் செயல்படும். தொடக்கத்தில் 35 வயதுப் பெண்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு புற்றுநோய் சிகிச்சை இயக்கத்தின் கீழ், தேசிய சுகாதார இயக்கம் (NHM) தமிழ்நாடு மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. HPV-DNA பரிசோதனை, கருப்பைவாய்ப் புற்றுநோய் அபாயம் உள்ள பெண்களைக் கண்டறிய உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கும் அதிக உணர்திறன் கொண்ட முதன்மைப் பரிசோதனை முறையாகும். WHO-வின் 90–70–90 இலக்குகளில், 35 மற்றும் 45 வயதுக்குள் 70% பெண்களை உயர்செயல்திறன் பரிசோதனை மூலம் பரிசோதிப்பதும் அடங்கும்.