இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ், ஒன்றிய சுற்றுலா அமைச்சகம் நடத்திய 2-ஆவது பிரிக்ஸ் 2026 சுற்றுலா பணிக்குழுக் கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சுற்றுலா; நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலா; சுற்றுலாத் திறன் மேம்பாடு மற்றும் திறன் கட்டமைப்பு; சுற்றுலாப் பரிமாற்றங்கள் மற்றும் தடையற்ற பயண வசதி ஆகிய நான்கு முன்னுரிமைப் பகுதிகள் விவாதிக்கப்பட்டன. முதல் கூட்டம் 2026 மே 25 அன்று இணையவழியில் நடந்தது. அதைத் தொடர்ந்த பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம், ‘ஜெய்ப்பூர் பிரகடனம்’ எனப்படும் பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் அறிக்கை 2026-ஐ ஒருமனதாக ஏற்றது. AI சார்ந்த மற்றும் நிலையான சுற்றுலா, திறன் மேம்பாடு, தடையற்ற பயணம் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை இது வழங்குவதுடன், சுற்றுலா முதலீடு, உள்கட்டமைப்பு, மக்களிடையேயான தொடர்புகளையும் ஊக்குவிக்கிறது.