காலனித்துவ காலத்து விமான விதிகள், 1937க்குப் (Aircraft Rules, 1937) பதிலாக ‘பாரதிய வாயுயான் நியம், 2026’ (Bharatiya Vayuyan Niyam, 2026) விதிகளை ஒன்றிய அரசு அறிவிக்கை செய்துள்ளது; இவை 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். விமானப் பதிவு, உற்பத்தி, பாதுகாப்புச் சான்றளிப்பு, பராமரிப்பு, விமான இயக்கம், பணியாளர் உரிமம், விமான நிலைய இயக்கம் ஆகியவற்றுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை இவ்விதிகள் வழங்குகின்றன. அட்டவணைப்படி விமான சேவைகளை இயக்கும் நிறுவனங்கள் இயக்கச் செலவுகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்து, கட்டண விவரங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககத்திடம் (DGCA) சமர்ப்பிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மைக்காக விமானக் கட்டண விவரங்களைத் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் பிற டிஜிட்டல் தளங்களிலும் வெளியிட வேண்டும். அசாதாரணச் சூழல்களில் பொது நலன் கருதி விமானக் கட்டணங்கள் குறித்து ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ வழிகாட்டுதல்களை வழங்கலாம்; விமான நிறுவனங்களின் கட்டணங்களை DGCA தொடர்ந்து கண்காணிக்கும்.