வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகக் கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பன்னாட்டுத் தரத் திறன் பயிற்சி வழங்கும் 'வெற்றிக் கரங்கள்' திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ₹15 கோடியில் பதிவுபெற்ற 1,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பன்னாட்டு அளவிலான பயிற்சி அளிக்கப்படும். மேலும் 50,000 பதிவுபெற்ற தொழிலாளர்களுக்குக் கொத்தனார், தச்சு, மின்சாரம், குழாய் பொருத்துதல், வண்ணம் பூசுதல் ஆகியவற்றில் ஏழு நாள் பயிற்சியும், நாளொன்றுக்கு ₹800 ஊதிய இழப்பீடும் வழங்கப்படும். பதிவுபெற்ற இணையவழி (கிக்) தொழிலாளர்களுக்கான விபத்துக் காப்பீடு ₹10 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும்; மின்-இருசக்கர வாகனம் வாங்கும் 1,000 கிக் தொழிலாளர்களின் வங்கிக் கடன் வட்டியை அரசே ஏற்கும். சென்னை, கோயம்புத்தூர் பெருநகரப் பகுதிகளில் புலம்பெயர் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 50 தொழிலாளர் உதவி மையங்களும் தற்காலிகத் தங்குமிடங்களும் அமைக்கப்படும்.