தேடப்படும் அல்லது தலைமறைவான நபர்கள் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக இந்தியாவை விட்டு வெளியேறுவதைத் தடுக்க குடியேற்றப் பணியகம் (BoI) பயன்படுத்தும் லுக் அவுட் சுற்றறிக்கைகள் (LOC) வெளியிடுவதற்கான விதிகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் திருத்தியுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் (NCW), தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) போன்ற சட்டப்பூர்வ அமைப்புகள் இனி நேரடியாக LOC கோர முடியாது; காவல்துறை அல்லது மத்திய முகமைகள் வழியாகவே கோர வேண்டும். LOC படிவங்களில் தற்போது மூன்று நடவடிக்கைகள் உள்ளன: தடுத்து வைத்துத் தெரிவித்தல், வெளியேறுவதைத் தடுத்துத் தெரிவித்தல், சிறப்பு நிகழ்வுகளுக்கான 'குறிப்புகளைக் காண்க' (see remarks). உளவுத்துறை (IB), மத்தியப் புலனாய்வுக் கழகம் (CBI) போன்ற முகமைகள் தேசியப் பாதுகாப்பு அல்லது பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் மட்டுமே 'see remarks'-ஐப் பயன்படுத்தலாம். ஒருவர் தடுத்து வைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட முகமை 3 மணி நேரத்துக்குள் காவலில் எடுக்க வேண்டும் அல்லது காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்; 24 மணி நேரத்துக்குள் முழு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.