ஸ்ரீ விஜயபுரம் அருகே நார்த் பே பகுதியில், அந்தமான் கடலில் இந்தியாவின் முதல் திறந்த கடல் மீன் வளர்ப்புத் திட்டம் தொடங்கியது. ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகமும் தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனமும் (NIOT) இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட கடல் கூண்டுகளைக் கொண்டு, கடல் மீன்கள் மற்றும் ஆழ்கடல் கடற்பாசி வளர்ப்புக்காக இதனைச் செயல்படுத்துகின்றன. பொது-தனியார் கூட்டாண்மை மூலம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன், இம்மாதிரி பயனளிக்குமா என்பதை இம்முன்னோட்டத் திட்டம் சோதிக்கும். இது கடலோர வேலைவாய்ப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் நீலப் பொருளாதாரத்துக்கு உறுதுணையாக அமையும்.