ஜெர்மனியைச் சேர்ந்த Worth a Journey வெளியிட்ட ‘உலகின் 100 சிறந்த அருங்காட்சியகங்கள் 2026’ (The World's 100 Best Museums 2026) பட்டியலில், பாட்னாவில் உள்ள பீகார் அருங்காட்சியகம் உலக அளவில் 9-வது இடத்தையும் ஆசியாவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. 2026 பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய அருங்காட்சியகம் இதுவே. மெக்சிகோவின் மியூசியோ நேஷனல் டி ஆன்ட்ரோபொலொஜியா, ஸ்பெயினின் மியூசியோ டெல் பிராடோ, டென்மார்க்கின் லூசியானா நவீனக் கலை அருங்காட்சியகம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. நியூயார்க்கின் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகம் 10-வது இடத்தையும், பாரிஸின் லூவ்ர் அருங்காட்சியகம் 31-வது இடத்தையும் பெற்றன. பாட்னாவின் நேரு பாதையில் அமைந்துள்ள பீகார் அருங்காட்சியகத்தைக் கட்டடக் கலைஞர் ஃபுமிஹிகோ மாக்கியும் மும்பையைச் சேர்ந்த ஓபோலிஸ் ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனமும் வடிவமைத்தனர்.