சென்னையில் உள்ள சைபர் குற்றப் பிரிவு தலைமையகத்தை தமிழ்நாடு மாநில சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையமாக (TN-S4C) தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சைபர் குற்ற விவகாரங்களில் ஒன்றிய மற்றும் மாநில சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் மாநில முனைய அமைப்பாக இது செயல்படும். சைபர் குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல், புலனாய்வு செய்தல், வழக்குத் தொடர்வுக்கு உதவுதல், ஒருங்கிணைந்த நடவடிக்கை, உளவுத் தகவல் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் சைபர் தடயவியல் உதவி ஆகியவற்றை இந்த மையம் வழங்கும். “டிஜிட்டல் கைது” (Digital Arrest) வழக்குகள் தொடர்பாக 2025 டிசம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்த ரிட் மனுவில் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, இத்தகைய மையங்களை அமைக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA) மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.