கேரள மாநில பல்லுயிர் வாரியம் (KSBB), இந்தியாவின் முதல் மாநில அளவிலான 'சூழலமைப்புகளுக்கான சிவப்புப் பட்டியல் மதிப்பீடு' (Red List Assessment of Ecosystems – RLE) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஓராண்டுத் திட்டமான இதை கேரள வன ஆராய்ச்சி நிறுவனமும் MES அஸ்மாபி கல்லூரியும் இணைந்து நடத்துகின்றன; அனைத்து 14 மாவட்டங்களிலும் சூழலமைப்புச் சீர்குலைவு அபாயங்கள் மதிப்பிடப்படும். காடுகள், ஆறுகள், மிரிஸ்டிகா சதுப்பு நிலங்கள், சோலை-புல்வெளி சூழலமைப்புகள், கடலோர அலையாத்திக் காடுகள் ஆகியவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) ஐந்து தரப்படுத்தப்பட்ட அளவுகோல்களின்படி மதிப்பிடப்படும். தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள வெப்பமண்டல ஆற்றங்கரை பசுமைமாறாக் காடுகள் கடந்த நூற்றாண்டில் தங்கள் பரப்பில் 83%-ஐ இழந்துள்ளதால், IUCN அளவுகோல்களின்படி 'மிக அருகிய நிலை' (Critically Endangered) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், சூழலமைப்பு மீட்டெடுப்பு, காலநிலைத் தகவமைப்பு, நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்கு இத்திட்டம் வழிகாட்டும்.