12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய நீலக்குறிஞ்சி (Strobilanthes kunthiana) புதர்ச்செடிக்கு ஆண்டுதோறும் பாதுகாப்புத் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் (MoEFCC) தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திடம் (NGT) கோரியுள்ளது. நீலகிரி, பழனி-கொடைக்கானல், ஆனைமலை, மூணாறு-இடுக்கி உள்ளிட்ட 14 சூழல் மண்டலங்களில் 34 இடங்களில் இது பதிவாகியுள்ளது. திருவனந்தபுரம் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டலத் தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JNTBGRI) சூழலியல் கண்காணிப்பு, சீரழிந்த மலைப் புல்வெளி மீட்டெடுப்பு, அயல் ஊடுருவும் இனங்கள் அகற்றல், சுற்றுலா ஒழுங்குமுறை அடங்கிய இனம் சார்ந்த செயல்திட்டத்தை முன்மொழிந்தது. வனவிலங்கு வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைச்சக ஆதரவுடன் மாநிலங்கள் இதைச் செயல்படுத்தும்.