அரசமைப்பின் சட்டப்பிரிவு 263-இன் கீழ் குடியரசுத் தலைவர் பிறப்பித்த மாநிலங்களுக்கிடையேயான மன்ற (திருத்த) ஆணை 2026-ஐ ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஒரு மாநிலத்தில் சட்டப்பிரிவு 356-இன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் இருக்கும்போது அம்மாநில ஆளுநர் மன்றக் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார். தில்லியில் சட்டப்பிரிவு 239AB ஆணை, புதுச்சேரியில் யூனியன் பிரதேச அரசுகள் சட்டம் 1963, ஜம்மு-காஷ்மீரில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-இன் கீழ் குடியரசுத் தலைவர் ஆணை நடைமுறையில் இருக்கும்போது அந்தந்தத் துணைநிலை ஆளுநர்கள் அழைக்கப்படுவர். சர்க்காரியா ஆணையத்தின் (1983) பரிந்துரைப்படி, 1990 மே 28 அன்று அரசிதழில் வெளியான மாநிலங்களுக்கிடையேயான மன்ற ஆணை 1990 மூலம் இம்மன்றம் அமைக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இந்த ஆலோசனை அமைப்பில் அனைத்து முதலமைச்சர்களும், பிரதமர் நியமிக்கும் ஆறு ஒன்றிய கேபினட் அமைச்சர்களும் உறுப்பினர்கள்.