ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1 அன்று இந்தியாவின் எட்டு மாநிலங்களும் ஐந்து ஒன்றியப் பிரதேசங்களும் தங்கள் உருவாக்க நாளைக் கொண்டாடுகின்றன. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956-இன் கீழ் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா (அன்றைய மைசூர் மாநிலம்), கேரளா, மத்தியப் பிரதேசம், மெட்ராஸ் மாநிலம் (இன்றைய தமிழ்நாடு) ஆகியவை 1 நவம்பர் 1956 அன்று உருவாக்கப்பட்டன அல்லது மறுசீரமைக்கப்பட்டன. மெட்ராஸ் மாநிலம் 1969இல் தமிழ்நாடு எனவும், மைசூர் மாநிலம் 1973இல் கர்நாடகா எனவும் பெயர் மாற்றம் பெற்றன. பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டம், 1966-இன் கீழ் 1 நவம்பர் 1966 அன்று ஹரியானா பஞ்சாபிலிருந்து பிரிக்கப்பட்டது; பஞ்சாப் அதன் இன்றைய வடிவைப் பெற்றது. மத்தியப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2000-இன் கீழ் 1 நவம்பர் 2000 அன்று மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட சத்தீஸ்கர் இந்தியாவின் 26ஆவது மாநிலமானது. அந்தமான் நிக்கோபார் தீவுகள், டெல்லி, லட்சத்தீவு (மூன்றும் 1 நவம்பர் 1956), சண்டிகர் (1 நவம்பர் 1966), புதுச்சேரி ஆகிய ஐந்து ஒன்றியப் பிரதேசங்களும் இந்நாளைக் கொண்டாடுகின்றன.