விக்சித் பாரத் 2047 தொலைநோக்குக்கு ஏற்ப வங்கித் துறைச் சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க, 'விக்சித் பாரத்துக்கான வங்கியியல் உயர்நிலைக் குழு'வை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. முன்னாள் மத்திய கண்காணிப்பு ஆணையர் சுரேஷ் என். படேல் இதற்குத் தலைமை வகிப்பார். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) துணை ஆளுநர் ஷிரிஷ் சந்திர முர்மு, இந்தியன் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (MD & CEO) பத்மஜா சுந்துரு, RBI முன்னாள் துணை ஆளுநர் என். எஸ். விஸ்வநாதன் ஆகியோர் உறுப்பினர்கள். இந்திய வங்கித் துறையை உலக அளவில் போட்டித்திறன் மிக்கதாகவும், நிதி உள்ளடக்கம் கொண்டதாகவும், தாங்குதிறன் கொண்டதாகவும் மாற்ற, கட்டமைப்பு, நிறுவன, ஒழுங்குமுறை, சட்டமியற்றல் சார்ந்த சீர்திருத்தங்களை இக்குழு பரிந்துரைக்கும். வங்கி நடைமுறைகள், விவேக நெறிமுறைகள் (prudential norms), உலகின் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன், மண்டல ஊரக வங்கிகள் (RRBs), கூட்டுறவு வங்கிகளுக்கான சீர்திருத்தங்களையும் இது பரிசீலிக்கும். இணைய அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்புகளுடன் வங்கிகளில் AI, டிஜிட்டல் புத்தாக்கங்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு வரைபடத்தையும் இது தயாரிக்கும்.