தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் 18 பெரிய பூநாரைகள் (Phoenicopterus roseus) காணப்பட்டன. உள்நாட்டு நன்னீர் ஏரியான வீராணத்தில் இது அரிதான நிகழ்வாகும். இப்பறவை பொதுவாக கடலோர ஈரநிலங்கள், சேற்றுநிலங்கள், காயல்கள் மற்றும் ஆழமற்ற நீர்நிலைகளில் வாழ்கிறது; குளிர்காலத்தில் கட்ச் வளைகுடாவிலிருந்து கிழக்குக் கடற்கரை நோக்கி வலசை செல்கிறது. குறைந்த மழைப்பொழிவு, காவிரி நீர்வரத்துக் குறைவு, கடலோரச் சேற்றுநிலங்களில் உணவுப் பற்றாக்குறை ஆகியவை இதன் வழக்கமான வலசைப் பாதையை மாற்றியிருக்கலாம். IUCN சிவப்புப் பட்டியலில் இவ்வினம் 'அச்சுறுத்தல் குறைந்த இனம்' (Least Concern - LC) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.