2026-ஆம் ஆண்டு இந்தியா–நியூசிலாந்து விளையாட்டு உறவின் நூற்றாண்டைக் குறிப்பதால், இரு நாடுகளும் விளையாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன. 1926-இல் இந்திய ராணுவ ஹாக்கி அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதிலிருந்து இந்த உறவு தொடங்கியது. ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் ரக்பி, படகு வலித்தல் (rowing), கேனோயிங், பாய்மரப் படகு, தடகளம், சைக்கிள் ஓட்டம் ஆகியவை ஒத்துழைப்புக்கான விளையாட்டுகளாக அடையாளம் காணப்பட்டன. இந்திய விளையாட்டு ஆணையமும் இந்திய ஒலிம்பிக் சங்கமும் இதில் ஈடுபட்டுள்ளன. முன்மொழியப்பட்ட இந்தியா–நியூசிலாந்து நூற்றாண்டு விளையாட்டு ஒத்துழைப்புத் திட்டம் 2026, பயிற்சி முகாம்கள், பயிற்சியாளர் பரிமாற்றம், விளையாட்டு அறிவியல் கூட்டுழைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும்.